"நீங்கள் 40000-45000 வாக்குகளை வைத்து ஒருவரை எவ்வாறு பாராளுமன்றம் அனுப்புவீர்கள்?" என்று சிலர் கேட்கின்றனர்.
கடந்த ஆக்கத்தில் நாம் கூறியது போல, கண்டியிலிருந்து 3 ஆசனங்களை பெறுவதற்கான ஒரு வியூகமே (சுயேட்சை - 1, ஐ.தே.க - 2) வகுக்கப்பட்டிருந்தது. 2000 ஆண்டு தேர்தல் முடிவு அதற்கு நல்ல உதாரணம் என்பதையும் தெளிவுப்படுத்தியிருந்தேன்.
ஆனால், இன்று நிலமை தலைகீழாக மாறிவிட்டது. ஐ.தே.க. இரண்டாகப் பிரிந்திருக்கின்றது. இரு பக்கமும் முஸ்லிம்கள் வேட்பாளா்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். இது ஆபத்தான நிலையாகும். இதனால் முஸ்லிம் வாக்குகள் சிதறுகின்ற நிலமை தோன்றும்.
இதனை இன்னும் சற்று தெளிவாக கூறுவதானால் ஐ.தே.க. விற்கு சுமார் 6,0000- 70,000 முஸ்லிம் வாக்குகளே கிடைக்கப்பெறும். இப்போது குறித்த வாக்குகளே இரண்டாகப் பிரியப் போகின்றது. விளைவாக, ஐ.தே.க வின் வாக்குகள் அதிகரித்தாலும் முஸ்லிம் பிரதிநிதிகளின் விருப்பு வாக்குகள் குறைவடையும். சமூகத்தின் பிரதிநிதித்துவத்திற்கு எது நடந்தாலும் பரவாயில்லை, தனக்கு ஒரு பாராளுமன்ற ஆசனம் கிடைக்க வேண்டும் என்ற சுயநலத்தின் வெளிப்பாடே இதுவாகும்.
இச்சந்தர்ப்பத்தில் முக்கியமான ஒரு விடயத்தை கூறியே ஆகவேண்டும். முன்னால் மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தாரிற்கும் ஐ.தே.க. வில் வேட்பாளராக வருவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் அதனை விரும்பவில்லை என்றும் அறியக் கிடைத்தது. இது பழுத்த அரசியல்வாதிகளை விட ஹிதாயத் சத்தாரின் சமூகப் பற்று மற்றும் தூர நோக்கு சிந்தனையை பறைசாற்றுகின்றது. அந்த வகையில் அவரை பாராட்டியே ஆக வேண்டும்.
இப்புள்ளியிலிருந்து தான் ஐ.தே.க.விற்கு வாக்களிக்கின்றவர்கள் சிந்தித்து செயல்பட முன்வர வேண்டும். சுயேற்சைக்கு சேறுபூசிக் கொண்டிருப்பதை விடுத்து, இரு பக்கமும் வாக்குகளை சிதறவிடாமல் பொருத்தமான ஒரு கட்சிக்கு வாக்களித்து, 2015ல் பெற்றது போல இரண்டு ஆசனங்களையாவது காப்பாற்றிக் கொள்ள ஐ.தே.க. ஆதரவாளர்கள் முயற்சிக்க வேண்டும்.
கண்டி மாவட்டத்தில் 2010ம் ஆண்டு 4 முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் இருந்தன. கடந்த 2015ல் அது 2 ஆக மாறியது. சுயேட்சைக் குழு சுமார் 40000-45000 வாக்குகளை பெற்றால், இன்ஷா அல்லாஹ் ஒரு ஆசனத்தை கைப்பற்றி, கண்டி மாவட்ட பிரதிநிதித்துவத்தை 3ஆக அதிகரிக்கலாம். அது எப்படி என்று பார்ப்போம்.
சுயேட்சை குழு ஓா் ஆசனத்தை பெறுவது இவ்வாறுதான்!
கண்டி மாவட்டத்தில் சுமார் 170,000 முஸ்லிம் வாக்குகள் இருக்கின்றன. அதில் 130,000 செல்லுபடியாகுமென எதிர்பார்க்கலாம்.
நாம் மேலே கூறியது போல, ஐ.தே.க. ஆதரவாளர்கள், (இரண்டாகப் பிளவுபட்ட கட்சியில்) ஒன்றை மாத்திரம் தெரிவு செய்து சுமார் 60000-70000 வாக்குகளை வழங்குவதன் மூலம் 2 ஆசனங்களை பெறலாம்.
எஞ்சியுள்ள சுமார் 60000 வாக்குகளை ஆளும் கட்சிக்கு வழங்குவதன் மூலம் ஒரு ஆசனத்தை பெற முடியாது. ஏனெனில், அக்கட்சியின் வேட்பாளா் பட்டியல் பலம் வாய்ந்ததாகவும், விருப்பு வாக்கு போட்டி மிகக் கடுமையானதாகவும் காணப்படும். அவ்வாறு ஒரு முஸ்லிம் ஆளும் தரப்பில் வெற்றியடைய வேண்டுமெனில் குறைந்தபட்சம் 75000 வாக்குகளையாவது பெற வேண்டியிருக்கும். எனவே, அது சாத்தியமற்றதாகும்.
அத்துடன், ஆளும் கட்சியின் முஸ்லிம் விரோத போக்கு அதிகரித்த வண்ணமே இருக்கின்றது. எனவே, அதற்கு முஸ்லிம்கள் வாக்களிக்க வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கின்றமையும் கவனிக்கத்தக்கது.
ஒரு ஆசனம் எவ்வாறு?
மேலே நாம் கூறிய பின்னணியில், கண்டி மாவட்ட முஸ்லிம்களுக்கு சிறந்த அரசியல் தலைவா் ஒருவரை தெரிவு செய்வதற்கான ஒரு வாய்ப்பை இலங்கையில் அரசியலமைப்பு கொண்டிருக்கின்றது.
1988ம் ஆண்டிற்கு முன்னா் ஒரு கட்சி பாராளுமன்ற பிரநிதித்துவம் பெறுவதற்கு 12.5 வீதமான வாக்குகளையேனும் பெறவேண்டியிருந்தது. ஆனால், 1988 ஆம் ஆண்டு அரசியலமைப்பு சீா்த்திருத்தத்தின் மூலம் ஒரு கட்சி பிரதிநிதி ஒருவரை பெறுவதற்கு 5வீத வாக்குகளை பெற்றால் போதுமானது என மாற்றப்பட்டது.
எனினும், இவ்வாய்ப்பை நாம் வரலாறு நெடுகிலுமே தவறவிட்டு வந்திருக்கின்றோம். கடந்த பதிவில் குறிப்பிட்டது போன்று 2000ஆம் ஆண்டில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவூப் ஹக்கீம் நுஆ என்ற சிறிய கட்சியின் மூலம் போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
நாம் சுயேட்சை குழுவாக போட்டியிட்டு, 5 வீத வாக்குகளை பெறுவதன் மூலம் ஒரு பிரதிநிதியை பெற்றுக்கொள்வதே எமது நோக்கமாகும். பின்வரும் கணிப்பீட்டை சரியாக புரிந்துக்கொள்வதன் மூலம் நாம் எமது இலக்கை அடைந்துக் கொள்ளலாம்.
கண்டி மாவட்டத்தில் மொத்தமாக 111180 வாக்குகள் இருக்கின்றன. 12 ஆசனங்கள் ஒதுக்கப்படுகின்றன. அவற்றில் செல்லுபடியாகின்ற வாக்குகள் 880000 எனக் கருதுவோம். இது 11ஆல் பிரிக்கப்பட்டு (80000), அத்தொகையினால் கட்சிகள் பெறுகின்ற வாக்குகளுக்கு ஏற்ப ஆசனங்கள் ஒதுக்கப்படும். 12வது ஆசனம் கூடுதலான வாக்குகளை பெற்று வெற்றியடைகின்ற கட்சிக்கு வழங்கப்படும்.
கண்டி மாவட்டத்தில் மொத்தமாக 500000 வாக்குகளை A கட்சியினா் பெறுவார்களேயானால் 7 ஆசனங்களை அவர்களால் பெற முடியும். அது பின்வருமாறு அமையும். அக்கட்சி பெறுகின்ற 80000x6 = 480000 வாக்குகளுக்கு முதல் கட்டமாக 6 ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவர்களது 20000 வாக்குகள் (500,000-480000) மிகுதியாக காணப்படும்.
B1 கட்சியினா் 250,000 வாக்குகளையும் B லிருந்து பிரிந்த B2 கட்சியினர் 70,000 வாக்குகளையும் பெறுவார்களேயானால் முதல் கட்டமாக B1-3 ஆசனங்களை (80000x3 = 240000) பெறுவார்கள். அவர்களது மிகுதி வாக்குகள் 10,000ஆகும். இப்போது, 9 ஆசனங்களே ஒதுக்கப்பட்டுள்ளன.
அந்த வகையில் பார்க்கின்ற போது, A கட்சியினா் ஏற்கனவே கிடைத்த 6 ஆசனங்களுடன், மேலே கூறியுள்ள அடிப்படையில் மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளை பெற்றதற்காக இன்னுமொரு ஆசனமுமாக மொத்தமாக 7 ஆசனங்களைப் பெற்றுக் கொள்வா்.
12ல் இப்போது 10 ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. ஏனைய 2 ஆசனங்களும் எஞ்சியுள்ள வாக்குகளின் அடிப்படையிலேயே பிரிக்கப்படும். ஆனால், அது மொத்த வாக்குகளில் குறைந்த பட்சம் 5 வீதம் பெற்றிருக்க வேண்டும்.
அந்த வகையில் B லிருந்து பிரிந்த B2-1 தங்களது 70000 வாக்குகளுக்கு ஒரு ஆசனத்தை பெறும். இறுதி ஒரு ஆசனத்தை செல்லுபடியான மொத்த வாக்குகளில் 5 வீதமான சுமார் 44000 வாக்குகளை பெற முடியுமாக இருந்தால் சுயேற்சைக் குழுவிற்கு பெற்றுக் கொள்ளலாம்.
இந்த பொறிமுறையை வைத்தே நாம் இம்முறை சுயேட்சையாக களமிறங்குகிறோம். சிறந்த தலைவா்களை சமூகத்திற்கும் பிராந்தியத்திற்கும் நாட்டிற்கும் பெற்றுக்கொடுக்கும் ஒரு முயற்சியே இது. இதனை நன்கு விளங்கி மக்கள் ஒன்றிணைந்தால் ஒரு புதியவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது கடினமான காரியமல்ல. இதனைத் தானே 2000ம் ஆண்டு ரவூப் ஹகீம் அவர்களும் செய்து பாராளுமன்றம் சென்றார்?
இம்முறை இன்னுமொரு இலாபமும் இருக்கின்றது. அதாவது, கொரோனா தொற்றின் காரணமாக வாக்களிக்கப்படுகின்ற விகிதம் குறையவடையலாம். செல்லுபடியாகின்ற மொத்த வாக்குகளில் 5வீதம் என்பதால் எங்களது வெற்றிவாய்ப்பு குறைந்த வாக்குகளுக்கும் கிடைக்கலாம், இன்ஷா அல்லாஹ்.
2018 அக்குறணை பிரதேச தேர்தலின் போது நாங்கள் சுயேட்சையாக களமிறங்கினோம். தவிசாளராக வாய்பிருக்கின்றது என்றோம். அதிகமானவர்கள் நம்பவில்லை. எதிர்பார்க்கவுமில்லை.
அதனை சாதித்தது மாத்திரமல்ல, பல அமைச்சர்கள், கடந்த காலங்களில் அரசாங்க சார்பு பிரதேச சபை தலைவர்கள் பலர் இருந்தும், தசாப்தக் கணக்காக தேங்கி நின்ற பல பிரச்சினைகளை, ஊரின் தேவைகளை சுயேட்சையாக இருந்து, ஓரிரு வருடங்களில் செய்து காட்டியிருக்கின்றோம், அல்ஹம்துலில்லாஹ்.
இன்று கண்டி மாவட்ட மக்கள் மத்தியில் நல்லதொரு வியூகத்தோடு வந்திருக்கின்றோம். எதிர்கால சந்ததியினரது நலன் கருதி, பேதங்களை மறந்து ஒரு வரலாறு படைக்க எங்களோடு இணையுமாறு அன்பாக அழைக்கின்றோம்.
“எந்த ஒரு சமூகமும் தங்களை மாற்றிக் கொள்ளாதவரை, உண்மையில் அல்லாஹ்வும் அச்சமூகத்தின் நிலையை மாற்றுவதில்லை.
(அல்குர்ஆன்-13:11)
(அல்குர்ஆன்-13:11)
குறிப்பு:
வாக்குகளுக்கு ஏற்ப பிரதிநித்துவங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பது பற்றிய தெளிவை வழங்குவதற்காக ஒரு அட்டவணையை (எதிர்வு கூறல்களின் அடிப்படையில்) கீழே தந்திருக்கின்றோம்.
வாக்குகளுக்கு ஏற்ப பிரதிநித்துவங்கள் எவ்வாறு ஒதுக்கப்படுகின்றன என்பது பற்றிய தெளிவை வழங்குவதற்காக ஒரு அட்டவணையை (எதிர்வு கூறல்களின் அடிப்படையில்) கீழே தந்திருக்கின்றோம்.


No comments:
Post a Comment